மரணத்திலும் தொடரும் மனிதநேயம் கல்லூரி மாணவர் பிரதீப் குமாரின் கண்கள் தானம் எங்கள் தம்பி இல்லை ஆனால் அவரது கண்கள் இன்னும் இரண்டு பேருக்கு உலகை காணவைக்கும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க உருக்கம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 May 2026

மரணத்திலும் தொடரும் மனிதநேயம் கல்லூரி மாணவர் பிரதீப் குமாரின் கண்கள் தானம் எங்கள் தம்பி இல்லை ஆனால் அவரது கண்கள் இன்னும் இரண்டு பேருக்கு உலகை காணவைக்கும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க உருக்கம்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் எடுத்த மனிதநேயமான முடிவு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதில் உயிரிழந்த மாணவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டதால், பார்வையிழந்த இரு நபர்களுக்கு மீண்டும் ஒளி கிடைக்கவுள்ளது.


கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த கூ.பொன்ராசு – மங்கைவரம் தம்பதியினரின் இரண்டாவது மகனான பொன்.பிரதீப் குமார், விருதாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) தனது வீட்டில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும், நண்பர்களையும், கிராம மக்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.


இந்த துயரமான சூழ்நிலையிலும், பிரதீப் குமாரின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் பொன்.பிரவீன்குமார் ஆகியோர் மனிதநேயத்துக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் கண்தானம் செய்ய முடிவு செய்தனர். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், மறைந்த பிரதீப் குமாரின் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன.


மருத்துவக் குழுவினர் உடனடியாக கண்தான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதன் மூலம் பார்வையிழந்து இருளில் வாழ்ந்து வந்த இரு நபர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறுகையில்,

“எங்கள் தம்பி பிரதீப் இனி எங்களுடன் இல்லை. ஆனால் அவனது கண்கள் மூலம் இன்னும் இரண்டு பேர் இந்த உலகத்தைப் பார்க்கப் போகிறார்கள். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது,” என்று உருக்கமாக தெரிவித்தனர்.


மேலும், கண்தானம் செய்ததற்கான சான்றிதழும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே உயிரிழந்தாலும், தனது கண்கள் மூலம் பிறர் வாழ்வில் ஒளி பரப்பிய பிரதீப் குமாரின் செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.


சமூகத்தில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும், மரணத்திற்குப் பிறகும் மனிதநேயம் தொடர வேண்டும் என்பதே பிரதீப் குமாரின் குடும்பத்தினரின் விருப்பமாக உள்ளது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad